ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நவிமும்பை துறைமுகத்தில் சிக்கியது
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மூலிகை பொருட்களுடன் கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.1,000 கோடி போதைப்பொருள் நவிமும்பை துறைமுகத்தில் சிக்கியது.
மும்பை,
சர்வதேச போதைப்பொருள் கும்பலால் மும்பை பெருநகரம் தள்ளாடி வருகிறது.
இந்த கும்பலை சேர்ந்தவர்கள் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு வகையான போதை பொருட்களை விற்று, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து மும்பையை அடுத்த நவிமும்பை நவசேவா துறைமுகத்துக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுடன் துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மூலிகை பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த கன்டெய்னரில் சந்தேகத்திற்கு இடமாக குச்சிகள் கிடந்தன. இதனால் அதிகாரிகள் அந்த குச்சிகளை எடுத்து சோதனை செய்தனர். அப்போது, அவை குச்சிகள் அல்ல பிளாஸ்டிக் குழாய்கள் என்பதை கண்டறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிளாஸ்டிக் குழாய்கள் மீது மூங்கில் குச்சிகள் போல பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் குழாய்களை உடைத்து பார்த்தனர். அப்போது உள்ளே வெள்ளை நிற பவுடர் இருந்தது. அது ‘ஹெராயின்’ போதைப்பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் குழாய்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட 191 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1,000 கோடி என கூறப்படுகிறது.
இதையடுத்து நடந்த விசாரணையில், இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து சாலை வழியாக ஈரான் கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கு இருந்து கடல் மார்க்கமாக நவிமும்பைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலில் தொடர்புடைய சுங்க ஏஜெண்டுகள் நெருலை சேர்ந்த மீனாநாத் போக்டே, மும்ரா பகுதியை சோ்ந்த கோண்டிபாவ் பாண்டுரங் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரும் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் முகமது நிமன், டெல்லியை சேர்ந்த சுரேஷ் பாட்டியா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சுரேஷ் பாட்டியா ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்த கடத்தலில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த கும்பல் ஏற்கனவே இதுபோல பெரிய அளவில் போதைப்பொருளை கடத்தி வந்து இருக்கலாம் என அதிகாரி ஒருவா் கூறினார். கடந்த ஜனவரி 31-ந் தேதி பஞ்சாப் போலீசார் அமிர்தசரசில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 194 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story