கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்
கொப்பலில் விபத்தில் சிக்கி இறந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை தொழில் அதிபர் அமைத்து உள்ளார்.
கொப்பல்,
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் காதல் நினைவு சின்னமாக தாஜ்மஹால் அமைந்து உள்ளது. இந்த தாஜ்மஹாலை மறைந்த முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதலி மும்தாஜின் நினைவாக கட்டினார். இந்த நிலையில் விபத்தில் சிக்கி இறந்த தனது மனைவிக்கு தொழில் அதிபர் ஒருவர் மெழுகு சிலையை அமைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்)தாலுகா பாக்யநகரை சேர்ந்தவர் சீனிவாஸ் குப்தா. இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது மனைவி மாதவி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் மாதவி உயிரிழந்தார். இதனால் சீனிவாஸ் குப்தா, 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே பாக்யநகரில் புதிதாக வீடு ஒன்றை கட்ட சீனிவாஸ் குப்தா முடிவு செய்தார். அதன்படி புதிய வீடு கட்டுமான பணிகள் நடந்து வந்தன. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்த வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்தனர். அதற்கு காரணம் இறந்த மாதவி புதிய வீட்டின் மாடியில் உள்ள ஷோபாவில் அமர்ந்து இருந்த காட்சி தான்.
சொந்த வீடு கட்ட ஆசை
அவர்கள் ஷோபா அருகே சென்று பார்த்த போதுதான் ஊஞ்சலில் ஷோபாவில் அமர்ந்து இருந்தது மாதவியை போன்ற தோற்றம் கொண்ட மெழுகு சிலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து விழாவில் கலந்து கொண்டவர்கள் சீனிவாஸ் குப்தாவிடம் கேட்டனர். அப்போது அவர், “எனது மனைவி எங்கும் செல்லவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார். அதன் பிரதிபலிப்பு தான் இந்த மெழுகு சிலை“ என்று கூறினார்.
இதுகுறித்து சீனிவாஸ் குப்தா மேலும் கூறுகையில், சொந்தமாக வீடு கட்டி, மாடியில் ஷோபாவில் அமர்ந்து இருக்க வேண்டும் என்பது தான் மாதவியின் கனவு. ஆனால் அந்த கனவு நிறைவேறுவதற்குள் மாதவி எங்களை விட்டு பிரிந்து சென்றார். ஆனாலும் அவரது கனவை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி நான் புதிதாக வீடு கட்டி, மாடியில் ஷோபாவை அமைத்து அதில் மாதவியின் மெழுகு சிலை வைத்துள்ளேன். மாதவின் ஆசையை நிறைவேற்றி உள்ளேன்“ என்றார்.
மேலும் சீனிவாஸ் குப்தா அவருடைய மனைவியின் மெழுகு சிலையை அமைக்க பெங்களூருவைச் சேர்ந்த மெழுகு சிலை வடிக்கும் கலைஞர் ஸ்ரீதர் மூர்த்தி உதவி இருக்கிறார். இந்த மெழுகு சிலையை வடிவமைக்க ஒரு வருடம் ஆகி உள்ளது.
அழகு பார்க்கிறோம்
இதற்காக சிலிக்கான் என்ற மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 அடி உயரம், 15 கிலோ எடையில் மாதவியின் மெழுகுச்சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சீனிவாஸ் குப்தாவின் மகள்கள் கூறுகையில், “3 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் எங்களை விட்டு தாய் பிரிந்து விட்டார். தற்போது எங்கள் தாய் உயிருடன் இருப்பது போன்று பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீதர் மூர்த்தி மெழுகு சிலையை அமைத்து கொடுத்து உள்ளார். அவருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். எங்களது தாயின் சிலைக்கு புதிய சேலை, கொலுசு, கம்மல், மோதிரம் ஆகியவற்றை அணிவித்து அழகு பார்த்து வருகிறோம்“ என்றனர்.
பாராட்டு
மேலும் மாதவியின் மெழுகு சிலையுடன் உறவினர்களும், அப்பகுதி மக்களும் தங்களது செல்போனில் செல்பி படமும் எடுத்து செல்கின்றனர். இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி உள்ளது.
இதனை பார்ப்பவர்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு கணவரா என சீனிவாச குப்தாவை பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story