எனக்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. பேட்டி
எனக்கும், என்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு டி.ஜே.ஹள்ளியில் நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) நடந்த வன்முறையில், என்னுடைய வீடு முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது. அந்த வீட்டில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து பதிவிட்ட, என்னுடைய சகோதரி மகன் நவீனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அவருடன் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் வெளியிட்ட முகநூல் பதிவுக்காக எனது வீட்டை தீவைத்து எரிக்க வேண்டிய அவசியம் என்ன?.
எனது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது. தங்க நகைகள், விலை உயர்ந்த பட்டு சேலைகள், பணம், பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, வீட்டுக்கு தீவைத்துள்ளனர். வாகனம் நிறுத்தும் பகுதிக்குள் புகுந்து ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளும் வீசினர். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. பெங்களூருவில் 25 ஆண்டுகளாக இதுபோன்ற வன்முறை சம்பவத்தை நான் பார்த்ததில்லை.
உயிருக்கு ஆபத்து
அந்த முகநூல் பதிவுக்கும், எனக்கும் தொடர்பும் இல்லாத போது, என் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த காரணம் ஏன்? என்று தெரியவில்லை. எனக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக எந்த விதமான விசாரணை நடந்தாலும் சரி. மத்திய குற்றப்பிரிவு போலீசாராக இருந்தாலும் சரி, சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டாலும் சரி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டாலும் சரி. விசாரணை எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் நடக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story