தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை


தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2020 11:15 PM GMT (Updated: 21 Aug 2020 5:56 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்தார்.

கழுகுமலை,

தூத்துக்குடி மாவட்ட எல்லையான  கழுகுமலை-சங்கரன்கோவில் ரோடு மேலகேட் பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, சோதனை சாவடியை திறந்து வைத்தார்.

பின்னர் அவர், கழுகுமலை அருகே கே.வேலாயுதபுரத்தில் பொதுமக்கள் சார்பில் 41 இடங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் இயக்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோதிகளை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அரிவாள், கத்தி வைத்திருந்தால்கூட குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்கிறோம். நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தாலும், தயாரித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்போம்.

போதை பொருட்களை ஒழிப்பதற்கு மாவட்டத்தில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தனிப்படையினர் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் திருச்செந்தூரில் ரூ.2½ கோடி மதிப்பிலான 25 கிலோ சாரஸ் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து, அந்த போதை பொருள் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பனை செய்தாலோ, வைத்திருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி (கழுகுமலை), அய்யப்பன் (கோவில்பட்டி மேற்கு), முத்து (கயத்தாறு) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story