கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 27-ந்தேதி கடலூர் வருகை


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 27-ந்தேதி கடலூர் வருகை
x
தினத்தந்தி 22 Aug 2020 5:58 AM GMT (Updated: 22 Aug 2020 5:58 AM GMT)

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27-ந்தேதி கடலூர் வருகிறார். இதையொட்டி அனைத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆலோசனை நடத்தினார்.

கடலூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்து வருகிறார். இது தவிர ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) கடலூர் வருகிறார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, தகுந்த ஆலோசனை வழங்க உள்ளார்.

இதற்காக கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறையினர் தயார் படுத்தி வருகின்றனர். இதேபோல் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ஆலோசனை

இந்நிலையில் முதல்-அமைச்சர் கடலூர் வருகை குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் வருகை குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் விளக்கி பேசினார். துறை வாரியாக அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வருவோர் அனைவரும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விழா மேடை

முன்னதாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை அமைக்க உள்ள இடத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர் விசுமகாஜன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றுதல், மரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல் போன்ற தூய்மை பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story