திருச்செந்தூரில் போலீசார் அனுமதி மறுத்ததால் இஸ்லாமியர் வீட்டில் நடந்த விநாயகர் சிலை வழிபாடு - மும்மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு


திருச்செந்தூரில் போலீசார் அனுமதி மறுத்ததால் இஸ்லாமியர் வீட்டில் நடந்த விநாயகர் சிலை வழிபாடு - மும்மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Aug 2020 4:00 AM IST (Updated: 22 Aug 2020 11:47 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று குறிஞ்சிநகர் கலையரங்கில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முயற்சி மேற்கொண்டனர். திருச்செந்தூர் போலீசார் அங்கு சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது குறிஞ்சிநகர். ஆண்டு தோறும் இங்குள்ள கலையரங்கில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்கள் மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று குறிஞ்சிநகர் கலையரங்கில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் அங்கு சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட சிறிய விநாயகர் சிலையை அதே பகுதியை சேர்ந்த முகம்மது உசேன் பாபு என்பவர் தனது வீட்டில் வைத்து வழிபாடு நடத்துமாறு கூறினார். இதையடுத்து, முகம்மது உசேன் பாபு வீட்டின் முகப்பு பகுதியில் சிறிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் முகம்மது உசேன் பாபு, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜேம்ஸ், இந்து முன்னணியை சேர்ந்த நகர துணை தலைவர் மாயாண்டி, பிரிதிவிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜையை ஆண்டவர் சுவாமிகள் நடத்தினார். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலை நேற்று மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் கரைக்கப்பட்டது.

Next Story