வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2020 8:12 AM GMT (Updated: 25 Aug 2020 8:12 AM GMT)

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

நெல்லை, 

நெல்லையில் பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி

இ-பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக உள்ளது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்வோம்.

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையும் சூழ்நிலை இல்லை. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. தேர்தல் நேரத்தில் யார் தலைமையில் கூட்டணி? என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

முதல்-அமைச்சர் வேட்பாளர்

பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து, அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுவோம். அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது, அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம். அதில் தலையிட எங்களுக்கு விருப்பம் இல்லை. தேர்தல் நேரத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் ஆகும். தமிழகத்துக்கு சென்னை தலைநகராக இருப்பது போன்று, தமிழ் மொழிக்கு மதுரையை தலைநகராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில செயற்குழு கூட்டம்

முன்னதாக நெல்லையில் உள்ள தனியார் ஓட்டலில், பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் உமாரதி ராஜன், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், நெல்லை மாவட்ட தலைவர் மகராஜன் மற்றும் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story