அரியலூர், பெரம்பலூரில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு


அரியலூர், பெரம்பலூரில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2020 10:55 PM GMT (Updated: 30 Aug 2020 10:55 PM GMT)

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்தபடி கடந்த மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அரியலூர் நகரில் சில மருந்து கடைகள், மருத்துவமனைகள் திறந்திருந்தன. அரியலூர் மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, கைலாசநாதர் கோவில் தெருக்கள் சந்திக்கும் தேரடி நான்கு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

கடைகள் அடைப்பு

பெரம்பலூர் நகரில் நேற்று கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால்பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூர் பகுதியில் கடைவீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், திருச்சி சாலை, காமராஜர் வளைவு, தபால்நிலைய தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கட்டுப்பாடான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், நேற்று சுபமுகூர்த்த தினமாக இருந்ததால் பொதுமக்களில் பலர் திருமணம், புதுமனை புகுவிழா மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்க கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்ததை காணமுடிந்தது. மாவட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கிராமப்புறங்களில் பெட்டிக்கடைகள் வழக்கம்போல திறந்து வைக்கப்பட்டிருந்தன.

Next Story