தர்மபுரியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புறநகர், டவுன் பஸ்கள் ஓட தொடங்கியது


தர்மபுரியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புறநகர், டவுன் பஸ்கள் ஓட தொடங்கியது
x
தினத்தந்தி 2 Sept 2020 3:30 AM IST (Updated: 2 Sept 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு புறநகர் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் ஓட தொடங்கியது.

தர்மபுரி,

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் மண்டலங்களுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பின்னர் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசு டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் என 165 பஸ்களை 50 சதவீத பயணிகளுடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு புறநகர் பஸ்கள் அரூர், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு இயக்கப்பட்டன. தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் இருந்து நேற்று காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களுக்கு வந்த பஸ்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முககவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே பஸ்களில் பின்படிக்கட்டுகள் வழியாக ஏறவும், முன்படிக்கட்டுகள் வழியாக இறங்கவும் அனுமதிக்கப்பட்டனர். பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பாலக்கோடு, பென்னாகரம், அரூர், உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களுக்கு நேற்று பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. புறநகர் மற்றும் டவுன்பஸ் போக்குவரத்து இரவு 9 மணிக்கு நிறுத்தப்பட்டது.

பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பஸ்நிலையங்களில் போக்குவரத்து தொடங்கியபோதிலும் அங்குள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் செயல்பட்டன. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பஸ்நிலையங்கள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story