சீர்காழி அருகே, காரில் கடத்தி வந்த 1,300 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் - டிரைவர் கைது
சீர்காழி அருகே காரில் கடத்தி வந்த 1,300 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி அருகே நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட புங்கனூர் கூட்டு சாலையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அந்த காரில் வந்த 3 பேர் தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் கார் டிரைவரை மடக்கி பிடித்து, காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 1,300 சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்தனர்.
காரை ஓட்டி வந்த திருத்துறைப்பூண்டி மங்கலநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
மேலும் காரில் இருந்து தப்பி ஓடிய செல்லூர் கிராமத்தை சேர்ந்த விஜயா, விளாங்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story