தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு


தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு
x
தினத்தந்தி 13 Sep 2020 11:51 PM GMT (Updated: 13 Sep 2020 11:51 PM GMT)

தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த பாதை தமிழக-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ளது. இதன் வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் திம்பம் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் 16-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்பு கம்பிக்கு கீழே ஜல்லி கற்கள் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட கரை பகுதி கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்தது. திடீரென கரை பகுதி சரிந்து விழுந்தது. இதனால் தடுப்பு கம்பிகள் அந்தரத்தில் தொங்குவது போல் நிற்கிறது.

வாகன ஓட்டிகள் பீதி

இதுபற்றி வாகன ஓட்டிகள் உடனே நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று மண் சரிந்த பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தனர். வாகனங்கள் செல்லும்போது பாரம் தாங்காமல் மேலும் சரிவு ஏற்படுவதை தடுக்க ரோட்டிலேயே 10 மணல் மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். இதன் காரணமாக வாகனங்கள் ரோட்டின் ஒருபுறம் சென்று வருகின்றன. தொடர்ந்து திம்பம் மலைப்பாதையில் மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பு கம்பிகள் வலுவிழுந்து முழுவதுமாக எப்போது விழுமோ? என வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்கின்றனர்.

Next Story