காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம்- 1 முதல் 19 வயதுடையவர்கள் பயன்பெறலாம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம்- 1 முதல் 19 வயதுடையவர்கள் பயன்பெறலாம்
x
தினத்தந்தி 14 Sep 2020 9:46 PM GMT (Updated: 14 Sep 2020 9:46 PM GMT)

தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, காஞ்சீபுரத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. அதையொட்டி, காஞ்சீபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

மேலும் ராகவேந்திரா நகரில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், வீடுகளுக்கு நேரில் சென்று குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

பிறகு மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 73 ஆயிரத்து 799 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு ‘அல்பென்டசோல்’ என்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் பெறலாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மூலம் அனைத்து குழந்தைகள் மற்றம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கப்படுகிறது. அதில், 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தலா அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தலா 1 ஒரு மாத்திரையும் வழங்கப்பட வேண்டும்.

மேலும் விடுபட்டவர்களுக்கு வரும் 28-ந் தேதி அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தைக் பேணி காக்க அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனி, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, நகர் நல அலுவலர் (பொ) மரு.பிரசன்னா, மருத்துவ அலுவலர் நாசிக், காஞ்சீபுரம் வட்டாட்சியர் பவானி, மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Next Story