மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு திடீர் குறைவு புதிதாக 17 ஆயிரம் பேருக்கு தொற்று


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு திடீர் குறைவு புதிதாக 17 ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 14 Sep 2020 11:14 PM GMT (Updated: 14 Sep 2020 11:14 PM GMT)

மராட்டியத்தில் நேற்று கொரோனா பாதிப்பு திடீரென குறைந்தது. அதன்படி புதிதாக 17 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டனர்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டியே இருந்தது. இந்தநிலையில் நேற்று பாதிப்பு திடீரென குறைந்து 17 ஆயிரத்து 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 374 ஆகி உள்ளது.

இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 850 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் மாநிலத்தில் 15 ஆயிரத்து 789 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் மேலும் 257 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 894 ஆக உயர்ந்து உள்ளது.

மராட்டியத்தில் 53 லட்சத்து 21 ஆயிரத்து 116 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 20.2 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களில் 70.16 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 2.77 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.

தொடர்ந்து அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த புனேயிலும் நேற்று தொற்று குறைந்து உள்ளது. இந்த நகரில் புதிதாக 1,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல புனே புறநகரில் 706 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 671 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புனே மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது 78 ஆயிரத்து 284 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தானே மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக கல்யாண் டோம்பிவிலியில் 508 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல தானே நகரில் புதிதாக 445 பேருக்கும், ஊரகப்பகுதியில் 370 பேருக்கும், நவிமும்பையில் 374 பேருக்கும், மிரா பயந்தரில் 244 பேருக்கும் வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. தானே மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 347 பேர் குணமடைந்தனர். தற்போது 31 ஆயிரத்து 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 301 பேர் பலியாகி உள்ளனர்.


Next Story