கணவர் கொலைக்கு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி


கணவர் கொலைக்கு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 15 Sep 2020 3:33 AM GMT (Updated: 15 Sep 2020 3:33 AM GMT)

கணவர் கொலைக்கு நீதி கேட்டு கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ராமசாமி மனைவி ஜெயமணி (வயது 21). நேற்று இவர், தனது 2 வயது மகனுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்ற போலீசார், ஜெயமணி கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதற்குள் 2 லிட்டர் கேனில் மண்எண்ணெய் இருந்தது. போலீசார் விசாரித்த போது, அவர் தனது குழந்தையுடன் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனை எடுத்து வந்ததாக கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலர் என்னுடைய கணவரை சீட்டு விளையாட அழைத்துச் சென்று தகராறு செய்து அவரை தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசு நிவாரணம்

இந்த கொலை குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை மட்டும் கைது செய்தனர். மற்றவர்களை கைது செய்யவில்லை. எனவே எனது கணவர் சாவுக்கு நீதி வேண்டும். மேலும், வாழ்வாதாரம் ஏதுமின்றி தவிக்கும் எனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்“ என்றார்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக ஜெயமணியை போலீசார் கைது செய்து, தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை தூக்கிக்கொண்டு இளம்பெண் மண்எண்ணெயுடன் வந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story