மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் தொற்று பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியது மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா + "||" + Infectious disease in Marathas 11 lakhs Corona to Union Minister Nitin Gadkari

மராட்டியத்தில் தொற்று பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியது மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா

மராட்டியத்தில் தொற்று பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியது மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
மும்பை,

பொதுமக்களை படாதபாடுபடுத்தி வரும் கொரோனா அரசியல் தலைவர்களையும் துரத்தி வருகிறது. சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சவுத்திரி, அர்ஜூன் ராம் மேக்வால், கஜேந்திர செகாவத், சுரேஷ் அங்காடி ஆகியோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மோடி மந்திரி சபையில் மூத்த மந்திரியுமான நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அதில் அவர், “ கடந்த செவ்வாய்க்கிழமை நான் பலவீனமாக இருப்பதாக உணர்ந்தேன். எனது டாக்டரிடம் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கடவுளின் கருணையால் நான் தற்போது நன்றாக உள்ளேன். என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிதின் கட்காரி மராட்டியத்தை சேர்ந்தவர் ஆவார்.

இதற்கிடையே மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மராட்டியம் முழுவதும் 23 ஆயிரத்து 365 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்தது.

இதுவரை மராட்டியத்தில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 221 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 474 பேர் இந்த ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து மராட்டியத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 883 பேரின் உயிரை இந்த நோய் தொற்று காவு வாங்கி உள்ளது.

ஆறுதல் தரும் வகையில் நேற்று 17 ஆயிரத்து 559 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 92 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 97 ஆயிரத்து 125 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 378 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 280 ஆகி உள்ளது.

புனே நகர் பகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 141 பேரும் அடங்குவர். மேலும் இங்கு 26 உயிரிழந்தை அடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 42 ஆக உயர்ந்துள்ளது.