கொள்ளிடம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பருத்தி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை


கொள்ளிடம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பருத்தி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 17 Sep 2020 1:16 AM GMT (Updated: 17 Sep 2020 1:16 AM GMT)

கொள்ளிடம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பருத்தி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.

இங்கு விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு பஞ்சு மூட்டைகளை கொள்முதல் செய்தது.

விவசாயிகள் கொண்டுவரும் பஞ்சு மூட்டைகள் ஏலம் விடும் முறையை பின்பற்றி அதன் அடிப்படையில் அரசு நிர்ணயித்த விலைக்கு ஏற்ற வகையில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை கொள்முதல் செய்தனர். ஆனால் நேற்று முதல் மத்திய அரசு சார்பில் பஞ்சு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் நேரில் வந்து விலை நிர்ணயம் செய்தனர்.

பூச்சி தாக்குதல்

நேற்று விவசாயிகளிடம் இருந்து கொண்டுவரப்பட்ட பஞ்சு மூட்டைகளை ஆய்வு செய்தபோது கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக பஞ்சு நிறம் மாறி பூச்சி தாக்குதலுக்குள்ளாகி இருந்தது. இதனால் எதிர்பார்த்த விலைக்கு கொள்முதல் நடைபெறவில்லை. பஞ்சின் தரம் குறைந்து இருந்ததால் அதிகாரிகள் அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பருத்தி விவசாயிகளின் கோரிக்கையினை ஆய்வு செய்த அதிகாரிகள் பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 459 மற்றும் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3ஆயிரம் வீதமும் நிர்ணயம் செய்து பருத்தியை நேற்று கொள்முதல் செய்தனர். நேற்று விவசாயிகளிடமிருந்து 300 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக பருத்தியில ஈரப்பதம் அதிகமாக இருந்ததாலும் பூச்சி தாக்குதல் காரணமாகவும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Next Story