6 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு உணவு தானிய அங்காடி திறக்கப்பட்டது மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி


6 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு உணவு தானிய அங்காடி திறக்கப்பட்டது மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 19 Sep 2020 12:29 AM GMT (Updated: 19 Sep 2020 12:29 AM GMT)

6 மாதங்களுக்கு பிறகு சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த அங்காடி நேற்று திறக்கப்பட்டது. மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறி சந்தை திருமழிசை துணைக்கோள் நகரத்திலும், பழச்சந்தை மாதவரம் பஸ் நிலையத்திலும், பூ மார்க்கெட் வானகரத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் கோயம்பேடு சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த உணவு தானிய வணிக வளாகம் மாற்று இடம் ஒதுக்கப்படாத நிலையில் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் 18-ந் தேதி (நேற்று) திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் உணவு தானிய வளாகத்தில் உள்ள கடைகள் புனரமைப்பு பணி நடந்து வந்தது. வியாபாரிகள் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வாங்கி செல்ல ஏதுவாக கடைகளுக்கு முன்பாக தரையில் வட்டங்கள் வரையப்பட்டன.

இந்த நிலையில் அரசின் உத்தரவுப்படி கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி உணவு தானிய அங்காடி வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ. நிர்வாகம் மேற்கொண்டு இருந்தது. சி.எம்.டி.ஏ. ஒப்புதல் பெற்ற அனுமதி அட்டை வழங்கப்பட்டிருக்கும் மொத்த வியாபாரிகள் மட்டுமே உணவு தானிய அங்காடி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக முக கவசம் அணியாதோரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

அனுமதி பாஸ் பெற்றிருந்த வாகனங்கள் மட்டுமே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வளாகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டன. கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டனர். வியாபாரிகளுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

கோயம்பேடு உணவு தானிய அங்காடியில் 270-க்கும் மேற்பட்ட கடைகளும், 150-க்கும் மேற்பட்ட உணவு கிடங்குகளும் இருக்கின்றன. இவற்றில் முதற்கட்டமாக 200 கடைகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், உரிய இழப்பீட்டை அரசு தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய வளாகத்தை சேர்ந்த வியாபாரி பி.பாண்டியராஜன் கூறுகையில், “6 மாதங்களாக கடைகள் மூடப்பட்டதால் பூச்சி, புழுக்கள் படையெடுத்து உணவு தானியங்களை வீணாக்கி விட்டது. இதனால் எங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு கடைக்கும் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே பெரும் இழப்பை சந்தித்து வாழ்வாதாரம் இழந்து உள்ள வியாபாரிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்” என்றார்.

கோயம்பேடு உணவு தானிய அங்காடியில் கடைகள் திறக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று உணவு தானிய அங்காடிக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள வியாபாரிகளை சந்தித்து பேசினார். பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து சென்றார்.

Next Story