திண்டுக்கல்லில், கணக்கெடுப்பு நடத்த வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


திண்டுக்கல்லில், கணக்கெடுப்பு நடத்த வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Sep 2020 5:57 AM GMT (Updated: 20 Sep 2020 5:57 AM GMT)

திண்டுக்கல்லில், கணக்கெடுப்பு நடத்த வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டில் அய்யன்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றி பெரிய அய்யன்குளம், சின்ன அய்யன்குளம், காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதி மக்களிடம் அரசு புறம்போக்கு நிலத்தில் நீர்வழிப்பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள்.

எனவே உங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பான ஆய்வு மேற்கொள்ள வேண்டி உள்ளது என கூறிச்சென்றனர். இந்த நிலையில் நேற்று மதுரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளான விமல்ராஜ், சுகவனம் ஆகியோர் அப்பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் விவரங்களை கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

போலீசார் சமரசம்

அப்போது நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எங்களை எப்படி வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். மேலும் எங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட யாரும் உங்களுடன் வரவில்லை. எனவே உங்களை எப்படி நாங்கள் நம்ப முடியும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மேற்கு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோர் உதவியுடன் கணக்கெடுப்பை நடத்தும்படி கூறி அனுப்பி வைத்தனர். குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story