கொரோனா நிவாரணம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் குழு சரமாரி கேள்வி அரசு அதிகாரிகள் திணறல்


கொரோனா நிவாரணம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் குழு சரமாரி கேள்வி அரசு அதிகாரிகள் திணறல்
x
தினத்தந்தி 23 Sep 2020 2:09 AM GMT (Updated: 23 Sep 2020 2:09 AM GMT)

கொரோனா நிவாரணம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு அதிகாரிகள் திணறினார்கள்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் மதிப்பீட்டுக்குழு மற்றும் பொதுக் கணக்கு குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுக் கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ., மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், வெங்கடேசன், வையாபுரி மணிகண்டன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங், கலெக்டர் அருண், சட்டசபை செயலாளர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், கொரோனா பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள். இதனால் அவர்களிடையே காரசார விவாதம் நடந்தது. கொரோனாவினால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை வழங்குவது குறித்து உத்தரவு எதுவும் பெறப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அன்பழகன் எம்.எல்.ஏ.

கூட்டத்தில் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கொரோனா இறப்பினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியுள்ளதால் இந்தியாவிலேயே புதுச்சேரியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேசிய அளவில் 1.6 சதவீதம் இறப்பு உள்ளது. கடலூரில் கூட 1.1 சதவீதம்தான். ஆனால் புதுச்சேரியில் 2.01 ஆக உள்ளது. கொரோனா அதிகமுள்ள முதல் 35 மாவட்டங்களில் புதுச்சேரி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடலூர், விழுப்புரத்தைவிட இறப்பு விகிதம் அதிகரித்ததற்கு காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். எதை சரியாக பின்பற்றாததால் மரணம் அதிகரித்துள்ளது, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஆங்கில மருத்துவத்துடன் சித்தா, யோகா, ஆயர்வேதம் என ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுத்துள்ளனர். ரெம்டெசீவர் உள்ளிட்ட உயர் மருந்துகளை காலத்தோடு நோயாளிகளுக்கு செலுத்தி குணப்படுத்தி வருகின்றனர்.

பொறுப்பற்ற செயல்

புதுவையில கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்பட வேண்டிய ஆயுர்வேதா, சித்தா, ஓமியோபதி மருந்துகள் வழங்கப்படுவதில்லை. கபசுர குடி நீரும் முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு வழங்கப் படவில்லை. நம் மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைவிட 2 மடங்கு நோயாளிகளை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதித்த அரசு சிகிச்சை அளிப்பதில் கைவிட்டுவிட்டது. அவர்களுக்கு எந்தவிதமான மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.

சத்தான உணவுகளும் அரசால் வழங்கப்படுவதில்லை. அவர்களை முழுமையாக அரசு கண்காணிப்பதும் இல்லை. தொற்று பாதித்தவர்கள் சர்வ சாதாரணமாக சுற்றுவதால் இந்தநோய் சமூக பரவலாக பரவி வருகிறது. இதிலும் அரசிடம் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும் இல்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கான அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கு அரசு செயலாளர்களின் பொறுப்பற்ற செயலே காரணம். அதேபோல் ரூ.750 மதிப்பிலான உணவு பொருட்களும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

சிவா எம்.எல்.ஏ.

பொதுக் கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அரசின் கணக்குப்படி இறப்பு எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது. ஆனால் உண்மையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். ஆனால் அரசு அதை மறைத்து குறைத்து காண்பித்து வருகிறது. வீட்டிலேயே கொரோனா தொற்றுக்கு ஆளாகி உடல் நலக்குறைவால் இறந்த பலரும் பரிசோதனை செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாததே தொற்று புதுவையில் வேகமாக பரவியதற்கு காரணம். ரெம்டெசீவர், நுண்ணுயிர் எதிர்ப்பு ஊசி என எந்த முக்கிய மருந்துகளும் அரசிடம் இல்லை. தற்போது தான் இந்த மருந்துகளை வாங்கத் தொடங்கியுள்ளது. இறந்தவர்களில் யாருக்காவது இந்த மருந்து வழங்கப்பட்டது என்று அதிகாரிகளால் கூற முடியுமா? இந்த மருந்துகளை காலத்தோடு வாங்காததற்கு காரணம் என்ன?

ஆக்சிஜன் வசதி

அரசின் அனைத்து துறையும் முடங்கியுள்ள நிலையில் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை ஏன் மருந்து வாங்க செலவிடவில்லை. நோயாளிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட உடன் எந்தவித சிகிச்சையும் அளிப்பதில்லை. தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரைகளை வழங்கி 3 வேளை சாப்பாடு மட்டும்தான் அரசு தருகிறது. மூச்சுத்திணறல் அதிகமாகி அவதிப்படுவோருக்கு உயிர்காக்கும் ஊசி போடுவதில்லை. வென்டிலேட்டர் வசதியும் இல்லை.

போதுமான அளவு ஆக்சிஜன் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல் பலர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் கூட 3 அல்லது 4 நாட்கள் கழித்துதான் வழங்கப்படுகிறது. இந்த காலதாமதம் ஏன்? இறந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அது ஏன் இன்னும் வழங்கப்படவில்லை? தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறியும் வழங்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சரிவர கண்காணிப்பதில்லை.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story