இரட்டிப்பு பணம் தருவதாக கூறி தஞ்சையை சேர்ந்த 1000 பேரிடம் பங்குச்சந்தை நிறுவனம் மோசடி


இரட்டிப்பு பணம் தருவதாக கூறி தஞ்சையை சேர்ந்த 1000 பேரிடம் பங்குச்சந்தை நிறுவனம் மோசடி
x
தினத்தந்தி 24 Sep 2020 3:35 AM GMT (Updated: 24 Sep 2020 3:35 AM GMT)

இரட்டிப்பு பணம் தருவதாக தஞ்சையை சேர்ந்த 1000 பேரிடம் பங்குச்சந்தை நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். பின்னர் அவர்கள் மக்கள் சட்ட உரிமை கழகத்தை சேர்ந்த வக்கீல் அருள்மொழிராஜன், வக்கீல் அன்பழகன் ஆகியோர் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கோவையை மையமாக கொண்டு செயல்படும் யுனிவர்சல் டிரேடிங் என்டர்பிரைசஸ் என்ற பங்குச்சந்தை நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. தஞ்சையிலும் இதன் கிளை உள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 10 மாதத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி உள்ளனர். அதன்படி முதல் ஓரிரு மாதங்களில் பணமும் கொடுத்துள்ளனர்.

1000 பேரிடம் மோசடி

அதன்படி ஏராளமானோர் பணம் கட்டி உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் கட்டி சேர்ந்துள்ளனர். ஆனால் முதிர்ச்சி அடைந்தும் பணம் அவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படவில்லை. பின்னர் நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. கொரோனா தொற்று காரணமாக அவர்களை நேரடியாக சந்திக்கவும் முடியவில்லை.

இது குறித்து கேட்டபோது எங்களுக்கு எதிராக செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டுகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தை சேர்ந்த கவுதம் ரமேஷ் சேலம் மத்திய குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழகம் மட்டும் அல்லாது கேரளாவிலும் மோசடி செய்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.

திரும்ப பெற்றுத்தர வேண்டும்

பணம் கட்டி ஏமாந்தவர்களில் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் ஏமாந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது கவுதம் ரமேசை, போலீசார் கைது செய்து இருப்பது எங்களுக்கு பணம் திரும்ப கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. மேலும் நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story