தஞ்சையில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம்


தஞ்சையில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2020 2:51 AM GMT (Updated: 2020-09-25T08:21:05+05:30)

தஞ்சையில் வேளாண் சட்ட மசோதா நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு 3 வேளாண் சட்ட மசோதாக்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதே காவிரி உரிமை மீட்புக்குழு சார்பிலும் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சை, கும்பகோணம், வல்லம், செங்கிப்பட்டி, பூதலூர், மேலஉளூர் உள்ளிட்ட இடங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

சட்ட நகல் எரிப்பு

தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிமொழியன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வெற்றி, மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபிபுர்ரகுமான், தமிழ்தேசிய பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழ்தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராசுமுனியாண்டி, மாநகர செயலாளர் ராமசாமி, பனசைஅரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தீயை அணைக்க முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த தஞ்சை கிழக்குப்போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, தீயை அணைக்க முன்வந்தார். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பனசைஅரங்கன் அவரை அணைக்க விடாமல் அவரை மறித்து நின்றவாறு தடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்

இதே போல் வேளாண் சட்ட மசோதாவை கிழித்தெறியும் போராட்டம் நடத்தப்போவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் ரெயில் நிலையம் அருகே தொகுதி தலைவர் ஜாகிர்உசேன் தலைமையில், மாநகர தலைவர் அப்துல்காதர் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வேளாண் சட்ட மசோதாவை திரும்பபெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேளாண் மசோதா சட்ட நகலை கிழித்தெறிந்து கோஷங்கள் எழுப்பினர்.

திருவையாறு

திருவையாறு அருகே நடுக்காவேரி அரசு ஆரம்பசுகாதார நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விவசாயி சாமி கரிகாலன் தலைமை தாங்கினார். காவிரி மீட்புகுழு உறுப்பினர் துரைரமேஷ் முன்னிலை வகித்தார். சமவெளி இயக்க பாதுகாப்பு இயக்க நிர்வாகி பழனிராசு, காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வீரராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பூதலூர்

பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் வேளாண்மை சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழர் தேசிய பேரியக்க பொது செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். வேளாண் சட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார். இதேபோல் சாணார்பட்டி கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ் தேசிய பேரியக்க பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன் தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகிகள் கருணாநிதி, காமராஜ், விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கூனம்பட்டி பிரபாகரன், சீனிவாசன், ராஜேந்திரன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு வேளாண்மை சட்ட நகலை எரித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் மீது செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

38 பேர் மீது வழக்குப்பதிவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சையில் நேற்று காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சட்ட நகலை எரித்தும், கிழித்தெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில் அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் போராட்டம் நடத்திய தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை தலைமையில் 2 பெண்கள் உள்பட 25 பேர் மீதும், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போராட்டம் நடத்திய தொகுதி தலைவர் ஜாகிர்உசேன் தலைமையில் 13 பேர் மீதும் என மொத்தம் 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story