கடையம் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் தென்னை மரங்கள் நாசம்


கடையம் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் தென்னை மரங்கள் நாசம்
x
தினத்தந்தி 27 Sep 2020 10:15 PM GMT (Updated: 27 Sep 2020 7:06 PM GMT)

கடையம் அருகே ராமநதி அணைப்பகுதியில் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து 8 தென்னை மரங்களை நாசம் செய்தன.

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடமும், தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களும் உள்ளன. கடையம் அருகே உள்ள மேட்டூர் சபரி நகரை சேர்ந்த விவசாயி குமரன் என்பவருக்கு அணை மேற்பகுதியில் தோட்டம் உள்ளது. இதில் தென்னை, மா, நெல்லி மற்றும் முந்திரி போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து 8 தென்னை மரங்களை பிடுங்கி வீசியது. அப்போது காவலில் இருந்த காவலாளி சாமி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் கடைய வனவர் முருகசாமி தலைமையில் வனக்காப்பாளர்கள் மணி, பெனாசீர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது சோலார் மின்வேலியை உடைத்துக்கொண்டு அணை வழியாக தண்ணீரில் நீந்தி தோட்டத்துக்குள் காட்டு யானைகள் சென்றது தெரியவந்தது. வனத்துறையினர் சேதமடைந்த சோலார் மின்வேலியை சரிசெய்து தொடர்ந்து அந்த பகுதியில் தீ மூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story