நாகை-வேளாங்கண்ணி ரெயில் பாதை மின் மயமாக்கும் பணிகள் தீவிரம் - அடுத்த மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகள் தகவல்
நாகை-வேளாங்கண்ணி இடையே உள்ள ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதத்திற்குள்(அக்டோபர்) பணிகள் நிறைவு செய்யப்படும் என்று ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ரெயில் மார்க்கமாக வரும் பக்தர்கள் நாகை ரெயில் நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து பஸ், கார், ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பில் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று நாகை-வேளாங்கண்ணி இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நாகை-வேளாங்கண்ணி அகல ரெயில் பாதை போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த வழியாக தினந்தோறும் பயணிகள் ரெயில் மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர வாரந்தோறும் வேளாங்கண்ணியில் இருந்து கோவாவுக்கு வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி-காரைக்கால் வரை ரெயில் பாதைகள் மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாகை-வேளாங்கண்ணி இடையேயான ரெயில் பாதையும் மின்மயமாக்க திட்டமிடப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 கோடி என்கிற செலவில் நாகை- வேளாங்கண்ணி வரை 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த மின்மயமாக்கல் பணியானது நடந்து வருகிறது.
நாகை-வேளாங்கண்ணி இடையே 285 மின்சார கம்பங்கள் நடப்பட்டுள்ளது. மின்கம்பிகளை டிராலி மூலம் இணைக்கும் பணிகளில் ரெயில்வே துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 75 சதவீதத்துக்கும் மேல் பணிகளானது முடிவடைந்து விட்டன.
எனவே திட்டமிட்டதற்கு முன்னதாகவே அதாவது அடுத்த மாதத்திற்குள்(அக்டோபர்) மின்மயமாக்கல் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என ரெயில்வே துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே துறையின் இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story