காங்கிரசில் இருந்து விலகி கட்சி மாற திட்டமா? அமைச்சர் நமச்சிவாயம் பரபரப்பு அறிக்கை


காங்கிரசில் இருந்து விலகி கட்சி மாற திட்டமா? அமைச்சர் நமச்சிவாயம் பரபரப்பு அறிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2020 10:56 PM GMT (Updated: 30 Sep 2020 10:56 PM GMT)

காங்கிரசில் இருந்து விலகி கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து அமைச்சர் நமச் சிவாயம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக நமச்சிவாயம் பதவியில் இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் ஒருவருக்கு ஒருபதவி என்ற காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நமச்சிவாயம் நீக்கப்பட்டு ஏ.வி. சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இருப்பினும் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று வந்தார். இந்தநிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு மாறப்போவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் த.மா.கா.வில் இணைய உள்ளதாகவும், இதற்காக த.மா.கா. தலைவர் வாசனை நமச்சிவாயம் சந்தித்து பேசியதாகவும் சமூக வலைதளத்தில் வைரலானது.

முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு அடுத்த இடத்தில் அமைச்சரவையில் பதவி வகிக்கும் நமச்சிவாயம் கட்சி மாற திட்டமிட்டு இருப்பதாக வெளியான இந்த தகவல் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவதூறு

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களிலும், செய்தித்தாளிலும் என்னைப் பற்றி அரசியல் சம்பந்தமான சில அவதூறு தகவல்களை யாரோ திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பதை புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சியின் கண்ணியமிக்க தொண்டனாக செவ்வனே செயல்பட்டு வருகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

கற்பனைக்கு எட்டாதது

பதவிகளை துச்சமென மதித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் பயணித்து வருகிறேன். அரசியல் உள்நோக்கத்துடன் என்னைப் பற்றி அவதூறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருபவர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். கற்பனைக்கு எட்டாத இதுபோன்ற பொய்யான செய்திகளை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதை நான் இத்தருணத்தில் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story