முன்னாள் மந்திரி மகனின் படத்தை ஆபாசமாக சித்தரித்த வழக்கு கைதான முன்னாள் காதலிக்கு நிபந்தனை ஜாமீன்


முன்னாள் மந்திரி மகனின் படத்தை ஆபாசமாக சித்தரித்த வழக்கு கைதான முன்னாள் காதலிக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 1 Oct 2020 9:32 PM GMT (Updated: 1 Oct 2020 9:32 PM GMT)

முன்னாள் மந்திரி மகனின் படத்தை ஆபாசமாக சித்தரித்த வழக்கில் கைதான முன்னாள் காதலிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவரும் முன்னாள் மந்திரி ஒருவரின் மகனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இளம் பெண்ணுக்கும், முன்னாள் மந்திரி மகனுக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களின் காதலை முறித்து கொண்டனர். பின்னர் முன்னாள் மந்திரியின் மகன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் மந்திரி மகனின் உதவியாளர், அவரது அத்தை ஆகியோரின் செல்போன் எண்களுக்கு முன்னாள் மந்திரி மகன், அவரது மனைவியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரித்து அனுப்பப்பட்டிருந்தது. மேலும் 2 பேரின் புகைப்படங்களும் ஆபாச இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் காதலி கைது

இதுகுறித்து கடந்த ஆகஸ்டு மாதம் முன்னாள் மந்திரியின் மகன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது முன்னாள் காதலியான இளம்பெண் தான் முன்னாள் மந்திரியின் மகன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இளம்பெண் ஜாமீன் கோரி பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த செப்டம்பர் 8-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

நிபந்தனை ஜாமீன்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி இளம்பெண் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி இளம்பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் ரூ.1 லட்சத்தை பிணையத் தொகையாக கோர்ட்டில் கட்டவேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

Next Story