போதைப்பொருள் விவகாரத்தில் கைது: வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை; மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி


போதைப்பொருள் விவகாரத்தில் கைது:  வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை; மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 3 Oct 2020 6:05 AM IST (Updated: 3 Oct 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரைஉலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, போதைப்பொருள் விற்பனையாளர் வீரேன் கண்ணா உள்பட 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில் வீரேன் கண்ணாவை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து இருந்தனர். அப்போது அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

மேலும் தன்னுடைய செல்போன் ரகசிய குறியீடு மறந்து விட்டதாக போலீசாரிடம் வீரேன் கண்ணா தொடர்ந்து கூறி வந்தார். இதன் காரணமாக அவரது செல்போனை போலீசாரால் ஆய்வு செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அவர் கன்னட திரைஉலகினருக்கு போதைப்பொருள் விற்றதுடன், போதைப்பொருள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது. தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தார்கள். இதற்காக பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது

அந்த சோதனை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தான் நடத்தப்படுவது வழக்கம். வீரேன் கண்ணாவை இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவில் இருந்து அகமதாபாத்திறகு போலீசார் அழைத்து செல்ல உள்ளனர். அங்கு அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று போலீசார் கருதுகின்றனர்.

Next Story