அவதூறு வழக்கில் நடிகை ரிச்சாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார் ஐகோர்ட்டில் பாயல் கோஷ் தகவல்


அவதூறு வழக்கில் நடிகை ரிச்சாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார் ஐகோர்ட்டில் பாயல் கோஷ் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2020 3:09 AM IST (Updated: 8 Oct 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ரிச்சா சதா தொடர்ந்த அவதூறு வழக் கில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக ஐகோர்ட்டில் நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளார்.

மும்பை,

நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் தன்னை கற்பழித்தாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்தார். போலீசார் அனுராக் காஷ்யப் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யபுக்கு எதிராக அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் நடிகை ரிச்சா சதா மற்றும் 2 நடிகைகளின் பெயரையும் தொடர்புபடுத்தி இருந்தார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ரிச்சா சதா, பாயல் கோஷ் மீது மும்பை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாயல் கோஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-

கருத்தை திரும்பப்பெற தயார்

பாயல் கோஷ் தனது வீடியோவில் தவறுதலாக அப்பாவித்தனமாக அவ்வாறு பேசிவிட்டார். அவர் ரிச்சா சதாவை பின்பற்றுபவர், மேலும் அவரை பெரிதும் மதிப்பவர். அவர் தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள தயாராக உள்ளார். மேலும் அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளார். அவர் என்ன பேசியிருந்தாலும் அதற்காக வருந்துகிறார். எந்த ஒரு பெண்ணையும் அவதூறு செய்வது அவரது எண்ணம் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த ரிச்சா சதாவின் வழக்கறிஞர், தனது மனுதாரர் அவரது மன்னிப்பை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 12-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Next Story