பீகார் தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரசாரம் செய்கிறார் சிவசேனா அறிவிப்பு


பீகார் தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரசாரம் செய்கிறார் சிவசேனா அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2020 9:46 PM GMT (Updated: 8 Oct 2020 9:46 PM GMT)

பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி வேட்பாளர்களுக்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரசாரம் செய்ய உள்ளார்.

மும்பை,

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் -பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசின் பதவி காலம் முடிவடைவதால், 3 கட்டங் களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல், வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

இந்தநிலையில் சிவசேனா கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் முத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். சுமார் 50 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் பீகாரில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பிரசாரம் செய்வார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

பட்டியல் வெளியீடு

இவருடன் சேர்ந்து பீகார் தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ள 22 தலைவர்களின் பெயர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவும் இடம் பெற்றுள்ளார்.

மேலும் சிவசேனா தலைவர்கள் சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத், அனில் தேசாய், வினாயக் ராவத், அரவிந்த் சாவந்த், பிரியங்கா சதுர் வேதி, ராகுல் செவாலே மற்றும் கிருபால் துமானே உள்ளிட்டவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பீகாரில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

Next Story