குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: சாமி தரிசனம் செய்ய தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: சாமி தரிசனம் செய்ய தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 9 Oct 2020 12:12 AM GMT (Updated: 9 Oct 2020 12:12 AM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, சாமி தரிசனம் செய்ய தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நாட்டில் மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்படும் விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். முதல்நாள் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முக்கியமானது ஆகும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முதல்-அமைச்சர் பல்வேறு தளர்வுகள் அறிவித்து உள்ளார். அதில் கோவில்களை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கோவில்களில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, கோவிலின் உள்ளே பக்தர்கள் தரிசனம் செய்யலாம், ஆனால், கோவிலுக்கு வெளியில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது.

8 ஆயிரம் பேர்

குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம், போலீஸ், தசரா குழுவினர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் திருவிழாவை நடத்த ஆலோசிக்கப்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதன்படி 17-ந் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி, 26-ந் தேதி சூரசம்ஹாரம், 27-ந் தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த 3 நாட்கள் நடைபெறும் விழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்து இருக்கும். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்து எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, தினமும் 8 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலமும் டிக்கெட் பதிவு செய்யலாம். கோவிலுக்கு நேரில் வந்தும் டிக்கெட் பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

அனுமதி இல்லை

தசரா திருவிழாவையொட்டி கடற்கரை பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் கோவில் பிரகாரத்தில் நடைபெறும். பக்தர்கள் யாரும் கோவில் பகுதியில் தங்க அனுமதி கிடையாது. தற்காலிக கடைகள் அமைக்கவும் அனுமதி கிடையாது. பல்வேறு கிராமங்களில் தசரா குழு உள்ளது. இதுவரை 400 தசரா குழுவினர் கோவிலில் பதிவு செய்து உள்ளனர். இன்னும் பல தசரா குழுவினர் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்கள் வருகிற 14-ந் தேதி வரை கோவிலில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தசரா குழுவை சேர்ந்த 2 நிர்வாகிகள் மட்டும் கோவிலுக்கு வந்து காப்புகளை வாங்கி சென்று ஊரில் உள்ள பக்தர்களுக்கு வழங்கலாம்.

பக்தர்கள் வேடம் அணிந்து வருவது வழக்கம். ஆனால், இந்த முறை கோவிலுக்கு வேடம் அணிந்து வருவதற்கு அனுமதி கிடையாது. வேடம் அணிபவர்கள், அந்தந்த ஊர்களில் மட்டுமே காணிக்கை சேகரிக்கலாம். வெளியூர்களுக்கோ, கோவிலுக்கோ வேடம் அணிந்து வரக்கூடாது. அந்த ஊரிலேயே வேடம் அணிந்து, அங்கேயே விரதம் முடித்துக் கொள்ள வேண்டும்.

ஒத்துழைப்பு

கோவில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் எதுவும் இயக்கப்படாது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வழக்கம் போல் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பக்தர்கள் யூடியூப், உள்ளூர் டி.வி.க்கள் மூலம் கோவில் நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர வேண்டாம். கோவில் வளாகத்தில் தங்குவதற்கு எந்தவித அனுமதியும் அளிக்கப்படாது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முககவசம், சமூக இடைவெளி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதனை கடைபிடிக்காத நிலையில் நோய் பரவும் அபாயம் ஏற்படும். ஆகையால் அனைத்து பக்தர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அபராதம்

இதேபோல் தூத்துக்குடி உள்பட அனைத்து இடங்களில் உள்ள கோவில்களிலும் வெளியில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி கிடையாது. மேலும், கொரோனா வைரசை தடுப்பதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு இதுவரை சுமார் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உடன் இருந்தார்.

Next Story