முதல்-அமைச்சர் நாளை மறுநாள் தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி வருவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பணிகளை ஆய்வு செய்கிறார்.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக தூத்துக்குடிக்கு வருகிற 13-ந்தேதி (அதாவது நாளை மறுநாள்) வருகிறார். அவருக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளுடன் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்கிறார். மேலும் அவர், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார். சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், திறந்தும் வைக்கிறார். மக்கள் கனவாக நினைத்த பல திட்டங்களையும் முதல்-அமைச்சர் அறிவிக்கவுள்ளார். முதல்-அமைச்சரின் தூத்துக்குடி வருகை, வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.23 கோடி மதிப்பில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான ‘லீனியர் ஆக்சிலேட்டர்‘ கருவி நிறுவப்பட்டுள்ளது. இதற்காக ரூ.17 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன வசதியை முதல்-அமைச்சர் நேரடியாக திறந்து வைக்கவுள்ளார். இதன்மூலம் தென்மாவட்ட மக்கள் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சைக்கு சென்னைக்கு செல்ல வேண்டியது இல்லை.
அ.தி.மு.க.வில் இருந்து ஒருவர் போனால், 100 பேர் அ.தி.மு.க.வுக்கு வருவார்கள். தி.மு.க.வில் இணைந்துள்ள விளாத்திகுளத்தைச் சேர்ந்த நபர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. தற்போது அ.தி.மு.க.வில் தான் அதிகமானோர் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாகு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ். ஓட்டபிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரபாண்டி கோபி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story