புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்; 175 பேர் கைது


புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்; 175 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2020 11:07 PM GMT (Updated: 12 Oct 2020 11:07 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இதேபோன்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன், மாநகர செயலாளர் நல்லதம்பி ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் உலகநாதன், மின்சார பிரிவு செயலாளர் பெருமாள்சாமி, இசக்கிமுத்து, முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் 38 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அம்பை

அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் வடிவேல், ஒன்றிய துணை செயலாளர் பரத்வாஜ், மாதர் சங்க மாவட்ட தலைவி சபியாள் பீவி, நிர்வாகிகள் அணைவீரக்கண்ணு, தர்மலிங்கம் சிவகுமார், மைதீன் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 27 பேரை அம்பை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

களக்காடு

இதேபோன்று களக்காடு அண்ணா சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், ஒன்றிய பொறுப்பாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுகுமார், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 62 பேரை களக்காடு போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வள்ளியூர்

இதேபோல வள்ளியூர் பழைய பஸ் நிலையத்தில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் தாலுகா செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர்கள் வேம்பு சுப்பையா, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story