குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு கோடரியால் வெட்டி வாலிபர் படுகொலை தம்பி கைது


குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு கோடரியால் வெட்டி வாலிபர் படுகொலை தம்பி கைது
x
தினத்தந்தி 15 Oct 2020 3:20 AM IST (Updated: 15 Oct 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஹாவேரி அருகே, குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்த வாலிபரை, கோடரியால் வெட்டி அவரது தம்பியே படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் தம்பியை கைது செய்தனர்.

ஹாவேரி,

ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா புட்டபனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் கோரவர்(வயது 22). இவரது தம்பி தில்லப்பா கோரவர்(20). நாகராஜ் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நாகராஜ் வேலைக்கு எதுவும் செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோருக்கு, நாகராஜ் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நாகராஜ், குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த தில்லப்பா, நாகராஜை தட்டி கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. நாகராஜும், தில்லப்பாவும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

கோடரியால் வெட்டி படுகொலை

இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஆத்திரம் அடைந்த தில்லப்பா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து நாகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பேடகி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் நாகராஜை, தில்லப்பா கோடரியால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பேடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தில்லப்பாவை கைது செய்தனர். அண்ணனை, தம்பி கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பேடகி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story