ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்


ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2020 6:45 PM IST (Updated: 15 Oct 2020 8:49 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேச்சுரோபதி மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்படுவதாக கலெக்டர் திவ்யதர்ஷினி கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா சிகிச்சை மையங்களில் கடந்த 8 மாதங்களாக நேச்சுரோபதி மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தொற்று தீவிரமடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுவாசத்தை சீராக வைப்பதில் நேச்சுரோபதி மற்றும் யோகா பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவ துறையின் சார்பில் டாக்டர் சசிரேகா மற்றும் மருத்துவ குழுவினரால் வாலாஜா அரசு கல்லூரி மற்றும் வாலாஜா அரசு மருத்துவமனையில் நேச்சுரோபதி மற்றும் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கொரானா தொற்றால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கவும், நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும், தினமும் காலையில் உப்பு மற்றும் மஞ்சள் நீரில் வாய் கொப்பளித்தல், தியானம், யோகா, மூச்சு பயிற்சிகள், சூரியக்குளியல், நறுமண சிகிச்சைகள், நீராவி பிடித்தல், அக்குபிரஷர், சிரிப்பு மற்றும் கைத்தட்டுதல், இசை, தியானம், சிரமமில்லாமல் மூச்சு விடுவதற்கு தூங்கும் முறை, 8 வடிவ நடைபயிற்சி, விளையாட்டு மற்றும் நடனம், உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய விஷயங்களை நாம் அனைவரும் கடைபிடித்தால் கொரோனா மட்டுமின்றி, வேறெந்த நோயும் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story