தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ரூ.6.21 லட்சம் மோசடி மேற்பார்வையாளர்- விற்பனையாளருக்கு போலீஸ் வலைவீ்ச்சு


தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ரூ.6.21 லட்சம் மோசடி மேற்பார்வையாளர்- விற்பனையாளருக்கு போலீஸ் வலைவீ்ச்சு
x
தினத்தந்தி 15 Oct 2020 4:45 PM GMT (Updated: 15 Oct 2020 4:45 PM GMT)

தூத்துக்குடியில், டாஸ்மாக் கடையில் ரூ.6.21 லட்சம் மோசடி செய்த மேற்பார்வையாளர், விற்பனையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மச்சாது நகரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு லூர்த்தம்மாள்புரம் 2-வது தெருவைச் சேர்ந்த திராவிட லிங்கம் (வயது 49) , என்பவர் மேற்பார்வையாளராகவும், புதியம்புத்தூர், நடுவக் குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் (42) என்பவர் விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் அதிகாரிகள் அந்த டாஸ்மாக் கடையின் கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, கடையில் மது விற்பனையின் மூலம் கிடைத்த ரூ.6 லட்சத்து 21 ஆயிரத்து 700 பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் விஜயசண்முகம், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

அவரது புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலன், டாஸ்மாக் மேற்பார்வையாளர் திராவிட லிங்கம் மற்றும் விற்பனையாளர் வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள அவர்கள் 2 பேரையும் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் வருமானத்தில், ரூ.2 கோடி அரசு கணக்கில் வராமல் கையாடல் செய்யப்பட்டதாக புகாரின் பேரில் மாவட்ட மேலாளர், உதவி மேலாளர் உள்பட 7 ஊழியர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மச்சாதுநகர் மதுபானக்கடையில் நடந்த மோசடி தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story