போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: மந்திரி யசோமதி தாக்கூருக்கு 3 மாதம் கடுங்காவல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: மந்திரி யசோமதி தாக்கூருக்கு 3 மாதம் கடுங்காவல் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 3:19 AM IST (Updated: 16 Oct 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யசோமதி தாக்கூருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து அமராவதி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யசோமதி தாக்கூர். இவர் கடந்த 2012-ம் ஆண்டில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அமராவதி மாவட்டம் சுன்னாப்பட்டி பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து விதியை மீறி ஒருவழிப்பாதை வழியாக காரில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், அவரது காரை தடுத்து நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த யசோமதி தாக்கூர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் போலீஸ்காரரை தாக்கியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ராஜாபேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

3 மாதம் கடுங்காவல்

இந்த வழக்கின் விசாரணை அமராவதி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த நீதிபதி ஊர்மிளா ஜோஷி நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது மந்திரி யசோமதி தாக்கூர் மற்றும் அவரது கார் டிரைவர், 2 ஆதரவாளர்களுக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கு விசாரணையின்போது 5 சாட்சிகளில் ஒரு போலீஸ்காரர் பிறழ்சாட்சியாக மாறி விட்டார். எனவே அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மந்திரி ஒருவருக்கு கோர்ட்டு 3 மாதம் கடுங்காவல் ஜெயில் தண்டனை வழங்கி உள்ள சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மந்திரி கருத்து

தீர்ப்பு பற்றி மந்திரி யோசமதி தாக்கூர் கூறியதாவது:-

ஒரு வக்கீலான நான் கோர்ட்டை எப்போது மதிப்பவள். இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க இது சரியான நேரம் அல்ல என்று கருதுகிறேன். தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு செல்ல உள்ளேன். நீதி வெல்லும்.

கோர்ட்டு தீர்ப்பை வைத்து பா.ஜனதாவினர் என்னை ராஜினாமா செய்ய சொல்வார்கள். அது எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் தான் இந்த சிரமம் மிகுந்த வேலையை செய்துள்ளனர். பா.ஜனதாவுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story