இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 4:13 AM GMT (Updated: 16 Oct 2020 4:13 AM GMT)

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் - மனைவி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துகோட்டையை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி ஷோபா (வயது 30). இவரது தம்பி முனுசாமி. இவருக்கும், கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா பதேபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணப்பா (45) மகள் கவுரி என்பவருக்கும திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கவுரி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து தந்தை நாராயணப்பாவின் வீட்டிற்கு வந்து விட்டார். இதன் காரணமாக நாராயணப்பா, அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் வெங்கடேஷ், சேகர் என்கிற ராஜசேகர் ஆகிய 4 பேரும் ஷோபாவின் வீட்டிற்கு சென்று அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.

அந்த நேரம் வீட்டில் இருந்த ஷோபாவின் தங்கை கவிதா (18) மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் 9.5.2015 அன்று நடந்தது. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி நாராயணப்பா அவரது மனைவி ஜெயலட்சுமி, வெங்கடேஷ், சேகர் என்கிற ராஜசேகர் ஆகிய 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்யடிதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக நாராயணப்பா, அவரது மனைவி ஜெயலட்சுமி, வெங்கடேஷ், சேகர் என்கிற ராஜசேகர் ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Next Story