உயிரிழந்த பெண் தொழிலாளி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி - பெரம்பலூரில் விவசாய தொழிலாளர்கள் தர்ணா


உயிரிழந்த பெண் தொழிலாளி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி - பெரம்பலூரில் விவசாய தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 16 Oct 2020 5:20 AM GMT (Updated: 16 Oct 2020 5:20 AM GMT)

உயிரிழந்த பெண் தொழிலாளி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மோதியதில், தொழிலாளியான அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனின் மனைவி ஜெயலட்சுமி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களது 2 மகன்களின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.

இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திம்மூர் ஊராட்சி செயலாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் 100 நாள் வேலையில் நடைபெறும் முறைகேடுகளை களைந்திட வேண்டும். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே கடந்த 26-ந் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் அக்டோபர் 15-ந் தேதி (நேற்று) பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகினர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர், மாநில செயலாளர் சின்னதுரை, மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் அச்சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை உண்ணாவிரதம் இருக்க ஒன்று கூடினர்.

அங்கும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் போலீசாரை கண்டித்தும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும், ஜெயலட்சுமியின் குடும்பத்தினரும், திம்மூர் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதனால் அந்தப்பகுதியில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவஹர்லால் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் பேச, ஒருசிலர் மட்டும் வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில், சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் சென்று கலெக்டர் சாந்தாவை சந்தித்து பேசி மனு கொடுத்தனர். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் விவசாய தொழிலாளர்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக உயிரிழந்த ஜெயலட்சுமியின் குடும்பத்தினருக்கு சங்கத்தின் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Next Story