மாவட்ட செய்திகள்

ராமநாதபுரத்தில், என்ஜினீயரை காதலித்து மணந்த மாணவி மதுரைக்கு கடத்தல்? + "||" + In Ramanathapuram, Student abducted in Madurai after falling in love with an engineer?

ராமநாதபுரத்தில், என்ஜினீயரை காதலித்து மணந்த மாணவி மதுரைக்கு கடத்தல்?

ராமநாதபுரத்தில், என்ஜினீயரை காதலித்து மணந்த மாணவி மதுரைக்கு கடத்தல்?
ராமநாதபுரம் அருகே என்ஜினீயரை காதலித்து மணந்த மாணவி மதுரைக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மகாசக்திநகரை சேர்ந்தவர் கோபால் என்பவரின் மகன் லட்சுமிகாந்தன் (வயது27). சிவில் என்ஜினீயர். இவரும் அதேபகுதியை சேர்ந்த அழகர்சாமி மகள் பிரியங்கா (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பிரியங்கா பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கடந்த சில நாட்களுக்குமுன் 2 பேரும் வெளியூர் சென்று மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இவர்கள் 2 பேரும் ராமநாதபுரம் வந்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்களாம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் லட்சுமிகாந்தன் தனது மனைவி பிரியங்காவை அழைத்துக்கொண்டு சாயல்குடியில் உள்ள அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றாராம். உத்தரகோசமங்கை அருகே நல்லாங்குடி ரோட்டில் சென்ற போது, 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காரில் வந்த கும்பல் அவர்களை வழிமறித்து பிரியங்காவை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுவிட்டதாக லட்சுமிகாந்தன் உத்தரகோசமங்கை போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் பிரியங்கா தனது தந்தையுடன் மதுரையில் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விசாரணைக்காக தந்தை மற்றும் மகளை வருமாறு அழைத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் வந்தபின்னர் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகே கடத்தப்பட்டாரா? உண்மையில் அதன்பின்னணி என்ன? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும்.