தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய ரவீந்திரநாத் எம்.பி. மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய ரவீந்திரநாத் எம்.பி. மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2020 4:24 AM IST (Updated: 17 Oct 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க., எம்.பி. ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலின்போது, தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், பல்வேறு முறைகேடுகளை செய்தும் ரவீந்திரநாத் வெற்றிப்பெற்றுள்ளார். எனவே, இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்து வருகிறார்.

நிராகரிக்க வேண்டும்

இந்த தேர்தல் வழக்கை நிராகரித்து, தள்ளுபடி செய்ய வேண்டும், என்றும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில், எம்.பி., ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்தார், அதில், ‘தனக்கு எதிராக தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல. அவர், உரிய விதிமுறைகளை பின்பற்றி இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. அதனால், இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிலானி பதில் மனு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நேற்று வழங்கினார்.

முகாந்திரம் உள்ளது

அதில், “ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிப் பெற்றதை எதிர்த்து மிலானி தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு முகாந்திரம் உள்ளது. அதனால் அந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி எம்.பி. ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story