7 மாதங்களுக்குப் பின் கூடிய மதகடிப்பட்டு வாரச்சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் கூடியதால் களை கட்டியது


7 மாதங்களுக்குப் பின் கூடிய மதகடிப்பட்டு வாரச்சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் கூடியதால் களை கட்டியது
x
தினத்தந்தி 20 Oct 2020 10:05 PM GMT (Updated: 20 Oct 2020 10:05 PM GMT)

மதகடிப்பட்டு வாரச் சந்தை 7 மாதங் களுக்குப்பிறகு நேற்று மீண்டும் செயல் பட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் கூடியதால் சந்தை களை கட்டியது.

திருபுவனை,

புதுவை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட மதகடிப்பட்டில் செவ்வாய்க் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு மாடு, விவசாய உபகரணங்கள், காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப் படுவது வழக்கம்.

இதை வாங்குவதற்காக திருபுவனை, மதகடிப் பட்டு, திருவண்டார்கோவில் உள்பட சுற்று வட்டாரங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருவார்கள். இதனால் செவ்வாய்க்கிழமை தோறும் மதகடிப்பட்டு சந்தை களை கட்டும்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மதகடிப்பட்டு வாரச்சந்தை மூடப்பட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து மாமூல் வாழ்க்கைக்கு பொதுமக்கள் திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் மதகடிப்பட்டு சந்தையில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி ஒருசில வியாபாரிகள் கடை போட்டு பொருட்களை விற்பனை செய்தனர். அவர்களை கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

7 மாதங்களுக்குப் பின் திறப்பு

தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதையொட்டி வாரச்சந்தை செயல்பட அனுமதிக்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டதை தொடர்ந்து அக்டோபர் 20-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்பட கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் அனுமதி அளித்தார்.

அதன்படி 7 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையான நேற்று மதகடிப் பட்டு வாரச்சந்தை மீண்டும் செயல்பட்டது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை பகுதியில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். மாட்டு வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்து இருந்தனர்.

காய்கறி, பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், விவசாய உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதை பல்வேறு ஊர்களில் இருந்து வந்து இருந்தவர்களும், திருபுவனை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

களை கட்டிய சந்தை

வாரச்சந்தையில் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி கடைப்பிடிக் கப்படுகிறதா? பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளனரா? என்று மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள், வியாபாரிகள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முககவசம் அணிந்து வரவேண்டும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்து ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு வாரச்சந்தை திறக்கப்பட்டதால் மதகடிப்பட்டு சந்தைகளை கட்டியது.

கடந்த சில நாட்களாக மதகடிப்பட்டு பகுதியில் பெய்த மழையால் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக இருந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இவர்களது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story