சென்னையில் கஞ்சா கடத்தல் வழக்கில் போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை,
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான அந்த போலீஸ்காரர் பெயர் அருண்பிரசாத் (வயது 27). இவர் சென்னையில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றினார். திருமணம் ஆகாத இவர் சென்னை வேப்பேரியில் வாடகை வீட்டில் வசித்தார்.
அவரிடம் இருந்து 1½ கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிகிறது. அத்தோடு கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ்காரர் அருண்பிரசாத் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆட்டோ டிரைவர்
இவருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக குமார் (40) என்ற ஆட்டோ டிரைவரையும் போலீசார் கைது செய்தனர். குமாரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் ஆனது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்து குமார் பெரிய அளவில் விற்பனை செய்வாராம்.
இவர்களுடன் 17 வயது சிறுவனும் கைதாகி இருக்கிறார். அந்த சிறுவன் மூலம்தான் போலீஸ்காரர் அருண்பிரசாத்தை பொறி வைத்து பிடித்துள்ளனர். சென்னை கோட்டை போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ்காரர் அருண்பிரசாத் கைது செய்யப்பட்டது, சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.