திண்டுக்கல் ஒன்றியக்குழு கூட்டம்: வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு - தீர்மான நகலை கிழித்து எறிந்தனர்


திண்டுக்கல் ஒன்றியக்குழு கூட்டம்: வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு - தீர்மான நகலை கிழித்து எறிந்தனர்
x
தினத்தந்தி 22 Oct 2020 3:44 PM IST (Updated: 22 Oct 2020 3:44 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறாததை கண்டித்து ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முருகபவனம்,

திண்டுக்கல் ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆணையாளர் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், என்ஜினீயர் குபேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சோபியா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) ஜேம்ஸ் பிரான்சிஸ் தீர்மானத்தை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

கவுன்சிலர் செல்வநாயகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பொதுநிதியில் ரூ.1 கோடியே 26 லட்சம் பெறப்பட்டது. அதில் ரூ.54 லட்சத்திற்கு செலவு செய்ததற்கு மன்றம் ஒப்புதல் பெறவில்லை.

ஆணையாளர்:- இதற்கான கணக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படும்.

கவுன்சிலர் மோகன் (ம.தி.மு.க.):- கவுன்சிலர்கள் பதவி ஏற்றதில் இருந்து, இதுவரை சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதில் ஆக்கபூர்வமான வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

கவுன்சிலர் முத்து (தி.மு.க.) : கலைஞர் நகரில் 20 கழிப்பறைகள் கட்டப்பட்டது. அதற்கான பணத்தை இன்னும் ஒப்பந்ததாரருக்கு வழங்கவில்லை.

இதைத்தொடர்ந்து ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெறாதை கண்டித்து தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் தீர்மான நகலை கிழித்தெறிந்தனர். பின்னர் ஒன்றியக்குழு அலுவலக வாசலில் அமர்ந்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. அரசுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். இதுவரை ஒன்றியத்தில் முறையான வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மேலும் இதுவரை நடந்த பணிகளுக்கும் அதிகாரிகள் முறையாக செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.

இதனால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் முறையான கணக்கை தாக்கல் செய்யும் வரை காலவரையின்றி ஒன்றியக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.

Next Story