முசிறி உழவர் சந்தையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பெண் வியாபாரி கைது


முசிறி உழவர் சந்தையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பெண் வியாபாரி கைது
x
தினத்தந்தி 22 Oct 2020 10:00 PM GMT (Updated: 23 Oct 2020 3:02 AM GMT)

முசிறி உழவர் சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பெண் வியாபாரியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முசிறி, 

முசிறி அருகே புதுப்பட்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி(வயது 66). முசிறி உழவர் சந்தையில் கடந்த பல வருடங்களாக காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முசிறி சிங்காரச்சோலை பகுதியை சேர்ந்த ஹர்ஷினி (18) என்பவர் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது விஜயலட்சுமியிடம் ஹர்ஷினி ரூ.90-க்கு காய்கறிகள் வாங்கிக் கொண்டு ரூ.500 கொடுத்துள்ளார். அதனை வாங்கி தனது பைக்குள் போட்டுவிட்டு சிறிது நேரம் தேடிவிட்டு சில்லரை இல்லை எனக்கூறி ரூ.500 நோட்டை விஜயலட்சுமி ஹர்ஷினியிடம் கொடுத்து சில்லரை மாத்தி விட்டுவா என கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஹர்ஷினி விஜயலட்சுமி கொடுத்த ரூ.500 நோட்டை அங்கிருந்த வியாபாரிகளிடம் கொடுத்து சில்லரை கேட்டபோது, ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் 500 ரூபாய் கள்ள நோட்டு என தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் முசிறி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமியிடம் விசாரணை செய்தபோது அவரிடமிருந்து மேலும் 100 ரூபாய் 3 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

மேலும் விஜயலட்சுமியை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விஜயலட்சுமிக்கு கள்ள நோட்டுகள் எவ்வாறு கிடைத்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விஜயலட்சுமியை கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முசிறி உழவர்சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story