ராசிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


ராசிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x

ராசிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

ராசிபுரம், 

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் குணசீலன், பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் சிவகுரு மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சியில் 8 தொகுப்பு சாலைப்பணிகள் ரூ.11.41 கோடி மதிப்பில் நடந்து வருவது பற்றியும், தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருவது பற்றியும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சித் திட்டப் பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்தும் நகராட்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மரக்கன்றுகள்

தொடர்ந்து சந்திரசேகரபுரம் ஊராட்சியில் ராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசமரம், வேப்பமரம் உள்பட பல்வேறு வகையான 560 மரக்கன்றுகள் நீர் ஊற்றி வளர்க்கப்பட்டு வருவதையும், அதே ஊராட்சியில் நகராட்சிக்கு சொந்தமான இன்னொரு இடத்தில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு சத்தான கீரைகள் வழங்குவதற்காக நடவு செய்யப்பட்டுள்ள 350 முருங்கை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன், பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் சிவகுரு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story