பெரியநாயக்கன்பாளையத்தை கலக்கிய திருட்டு கும்பல் கைது ரூ.40 லட்சம் வாகனங்கள் பறிமுதல்
பெரியநாயக்கன்பாளையத்தை கலக்கிய திருட்டு கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இடிகரை,
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் மற்றும் இடிகரை பகுதிகளில் கார், டெம்போ மற்றும் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோனது. இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து சிறப்பு படையினர் வாகனங்களை திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் ராமகிருஷ்ணா வித்யாலயாவில் வாகன திருட்டுபோனது. இதுதொடர்பாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
3 பேர் கைது
நேற்று முன்தினம் சிறப்பு படை போலீசார் அத்திப்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்தி சென்று மடக்கி பிடித்து, காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இடிகரையில் வசித்து வரும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த உதயநிதி (வயது 27), ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தன்ராஜ் (36), கோவை பூ மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முருகேசன் (47) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து இடிகரை, கணேசபுரம் கோட்டைப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்பட பல இடங்களில் கார், இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.40 லட்சம் வாகனங்கள் பறிமுதல்
இதில் உதயநிதி என்பவர் மீது தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல திருட்டு வழக்குகளும், தன்ராஜ் என்பவர் மீது கோவை மாநகரம், ஆர்.எஸ்.புரம் மற்றும் விருதுநகரில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட வழக்கும் உள்ளது என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள கார், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story