கன்னட பாடலாசிரியர் மனைவியிடம் சொத்துகள் அபகரிப்பு வழக்கு: கோர்ட்டில் சரண் அடைய வந்த வேலைக்கார பெண் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது


கன்னட பாடலாசிரியர் மனைவியிடம் சொத்துகள் அபகரிப்பு வழக்கு:  கோர்ட்டில் சரண் அடைய வந்த வேலைக்கார பெண் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 29 Oct 2020 11:15 PM GMT (Updated: 29 Oct 2020 7:23 PM GMT)

கன்னட திரைப்பட பாடலாசிரியர் மனைவியிடம் ரூ.6 கோடி சொத்துகள் அபகரித்த வழக்கில், கோர்ட்டில் சரண் அடைய வந்த வேலைக்கார பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

கொப்பல்,

கன்னட திரையுலகில் பாடலாசிரியராக இருப்பவர் கே.கல்யாண். இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. பல்லாரி, பாகல்கோட்டை, பெலகாவி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளில் பாடலாசிரியர் கே.கல்யாணுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கே.கல்யாணின் மனைவி அஸ்வினி தனது பெற்றோருடன், பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு சென்று இருந்தார். பின்னர் அவர்கள் பெங்களூருவுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கே.கல்யாண், அஸ்வினி மற்றும் அவரது பெற்றோரின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் மனைவி, அவரது பெற்றோரை யாரோ கடத்திச் சென்று விட்டதாக பெலகாவி மாலமாருதி போலீஸ் நிலையத்தில் கே.கல்யாண் புகார் கொடுத்தார். அவர் புகார் கொடுத்த மறுநாள் அஸ்வினி மாலமாருதி போலீசார் முன்பு ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், கணவர் கே.கல்யாண் தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்தார் என்றும் கூறி இருந்தார். இது கன்னட திரையுலகில் பரபரப்பை எற்படுத்தியது.

ஆனால் தன் மீது மனைவி கூறிய குற்றச்சாட்டை மறுத்த கே.கல்யாண், தனது மனைவி மற்றும் அவரது பெற்றோரை ஏமாற்றி பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த போலி மந்திரவாதியான சிவானந்த வாலி, தனது வீட்டு வேலைக்கார பெண் கங்கா குல்கர்னி ஆகியோர் சொத்துகளை அபகரித்து விட்டதாக மாலமாருதி போலீசில் புகார் அளித்து இருந்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்த போது போலி மந்திரவாதி சிவானந்த வாலி, அஸ்வினி மற்றும் அவரது பெற்றோரை ஏமாற்றி கல்யாண் பெயரில் இருந்த ரூ.6 கோடி சொத்துகளை அபகரிப்பு செய்தது தெரியவந்தது. இதனால் சிவானந்த வாலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வேலைக்கார பெண் கங்கா குல்கர்னியை போலீசார் தேடிவந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கொப்பல் டவுனில் உள்ள கோர்ட்டில் சரண் அடைய கங்கா குல்கர்னி வந்தார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து திடீரென குடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோர்ட்டு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஆகியோர் கங்கா குல்கர்னியை மீட்டு, சிகிச்சைக்காக கொப்பல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் கங்கா குல்கர்னி பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி அறிந்ததும் கொப்பல் டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று கங்கா குல்கர்னியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.

இதற்கிடையே கங்கா குல்கர்னி மராத்தி மொழியில் எழுதிய ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் நான் செய்த தவறுக்காக எனது முடிவை தேடிக்கொள்கிறேன். ஒரு தவறும் செய்யாத எனது 2 குழந்தைகளையும் கவனித்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக எழுதி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து கொப்பல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோர்ட்டில் சரண் அடைய வந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story