போலியாக ஆவணம் தயாரித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை


போலியாக ஆவணம் தயாரித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 30 Oct 2020 9:43 AM IST (Updated: 30 Oct 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

போலியாக ஆவணம் தயாரித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து திருவையாறு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

திருவையாறு, 

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றியவர் சுபத்ரா. இவர் கடந்த 11-1-2002 அன்று திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார். அதில் திருநீலக்குடி அவனியாபுரம் கிரசென்ட் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த அன்சாரி, ஆமினா என்ற ராஜாத்தி ஆகிய 2 பேரும் போலியான ஆவணங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயார் செய்து பணியில் சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதன்பேரில் திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் இந்த வழக்கு தஞ்சை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் கைது

மேலும் இது தொடர்பாக அன்சாரி, ஆமினா, ஸ்டீபன், கண்ணையன் ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருவையாறு குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 30-6-2003 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது ஆமினா மற்றும் கண்ணையன் ஆகியோர் இறந்து விட்டனர். மற்ற 2 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அன்சாரி, ஸ்டீபன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கியும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பாராட்டு

இந்த வழக்கில் சிறப்பான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை சி.பி.சி.ஐ.டி. சென்னை தலைமையக ஐ.ஜி. சங்கர், மத்திய மண்டல போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆகியோர் பாராட்டினர்.

Next Story