உணவின்றி தவிக்கும் குரங்குகள் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் திறக்கப்படாததால் வெளியூர் பயணிகள் ஏமாற்றம்


உணவின்றி தவிக்கும் குரங்குகள் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் திறக்கப்படாததால் வெளியூர் பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 1 Nov 2020 12:27 AM GMT (Updated: 1 Nov 2020 12:27 AM GMT)

சித்தன்னவாசல் சுற்றுலா தலம் திறக்கப்படாததால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும்அங்குள்ள குரங்குகள் உணவு இன்றி தவித்து வருகிறது.

அன்னவாசல், 

அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சுற்றுலாதலம் உள்ளது. இங்கு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்கும் அளவிற்கு குகை ஓவியங்கள், சமணர் படுக்கைகள், ஏழடிபட்டம், பூங்காக்கள், படகு குளங்கள், இசை நீருற்று, புல் தரைகள் ஆகியவை காண்போரின் கண்களை கவரும் வகையில் அமைந்து உள்ளன. சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதேபோல பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், புதுமண தம்பதிகள், குடும்பத்தினரும், வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்வது வழக்கம். உள்ளூர் மக்களும் அடிக்கடி வந்து செல்வர்.

மூடல்

சுற்றுலா பயணிகளின் வருகையால் எப்போதும் களை கட்டியிருந்த இந்த சுற்றுலாதலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தற்போது வரை மூடப்பட்டுள்ளது. இதனால், கடந்த 7 மாதத்துக்கும் மேலாக இந்த சுற்றுலாதலம் களையிழந்து காணப்படுகிறது. தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய, பெரிய சுற்றுலா தலங்கள் கூட திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சித்தன்னவாசல் சுற்றுலாதலம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், மற்ற சுற்றுலா தலங்களை போல இந்த சுற்றுலா தலமும் திறக்கப்பட்டு இருக்கும் என்று நினைத்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சித்தன்னவாசலுக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சித்தன்னவாசல் பகுதிகளில் ஆங்காங்கே கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனால், சுற்றுலாதலம் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ஏமாற்றதுடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள் சித்தன்னவாசல் முகப்பு பகுதியில் நின்று புகைபடங்கள் எடுத்துக்கொண்டு திரும்பி செல்கின்றனர். ஆக வே, இந்த சுற்றுலா தலத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

உணவின்றி தவிக்கும் குரங்குகள்

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் அதிக அளவு குரங்குகள், மயில்கள், வவ்வாள்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. இதில் குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே உணவு கிடைக்கும் சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் வழங்கும் உணவுகளை தின்று வாழ்ந்து வந்த குறங்குகள் தற்பொழுது 7 மாதங்களாக உணவின்றி இறந்தும், சித்தனவாசலை விட்டு வெளியேறியும் வருகின்றது. எனவே அந்த விலங்கினங்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story