அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு


அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Nov 2020 3:14 AM GMT (Updated: 4 Nov 2020 3:14 AM GMT)

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடி அருகே அவரது குல தெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மன்னார்குடி, 

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்(வயது 55) போட்டியிட்டார். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலாஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

சிறப்பு வழிபாடு

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுவதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துளசேந்திரபுரம் கிராமம் முழுவதும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலான தர்ம சாஸ்தா அய்யனார் கோவிலில் நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Next Story