தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.3½ கோடியில் மாணவர் விடுதி கட்டும் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்தார்


தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.3½ கோடியில் மாணவர் விடுதி கட்டும் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 7 Nov 2020 6:15 AM GMT (Updated: 7 Nov 2020 6:15 AM GMT)

தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.3.66 கோடி மதிப்பில் மாணவர் விடுதி கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

தர்மபுரி,

நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் 5 வகுப்பறை கட்டிடம், ஆண்கள் மற்றும் பெண்கள் சுகாதார வளாக கட்டிடம், குடிநீர் வசதி அமைப்பு மற்றும் 500 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை ரூ.1 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதேபோன்று தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதி ரூ.3 கோடியே 66 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது.

இந்த புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வள தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், இந்த புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைவில் முடித்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நல்ல திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறினார்.

விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் நீலாபுரம் செல்வம், மகேஸ்வரி பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சிவபிரகாசம், பெரியண்ணன், மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி, கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூக்கடை முனுசாமி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் ஆறுமுகம், பழனிசாமி, அங்குராஜ், தாசில்தார்கள் ரமேஷ், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் நன்றி கூறினார்.

Next Story